குர்பானி (உளுஹிய்யா) கொடுப்பதன் சிறப்பு
"என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன் மகனைத் தந்தருள்வாயாக என்று இப்ராஹிம் (அலை) துஆ செய்தார். எனவே நாம் அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறினோம்.
பிறகு (அம்மகன்) அவருடன் நடமாடக் கூடிய (வயதை அடைந்த) போது, அவர் கூறினார் என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாக கனவு கண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! (இஸ்மாயில் அலை) கூறினார், என்னருமை தந்தையே! உங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செய்யுங்கள், அல்லாஹ் நாடினால் என்னைப் பொருமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார். ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிபட்டு (இப்ராஹிம் அலை) மகனை பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது நாம் அவரை இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கண்ட (கனவை) மெய்ப்படுத்தினீர், நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்". (அல்-குர்ஆன் 37:100 – 107)
குர்பானியின் நோக்கம்:
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் "குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை, மாறாக உங்களிடம் உள்ள இறை அச்சம் தான் அவனை சென்றடையும்". (அல்-குர்அன் 22:37)
இறைவனுக்காக அறுத்து பலியிட்டு அதனுடைய இறைச்சிகளை ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதும், இறைவன் கட்டளையிட்டால் நான் எந்த தியாகத்தையும் செய்ய தாயார் என்ற உணர்வை பெறுவதும் தான் குர்பானியின் நோக்கமே தவிர கடவுளுக்கு படைப்பது அல்ல என்ற கருத்து மேற்கூறிய வசனம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மற்ற நாட்களில் செய்யும் நல்லறத்தை விட துல்ஹஜ் மாதம் 10ம் நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் சிறப்புக்குரியதாகும்.
அல்லாஹ்விடம் அதிக நன்மை பெற்றுத்தரக்கூடியதாகவும் இருக்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) புகாரி முஸ்லிம்.
அரஃபா தினத்தில் நோன்பு நோர்ப்பது முந்தைய மற்றும் அடுத்து இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி(ஸல்) அவர்கள் சுறினார்கள்.
அறிவிப்பவர் அபுகதாதா (ரழி) நூல் : திர்மிதி இப்னு மாஜா.
மேற்கூறிய ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக்கூடிய முஸ்லிம்களாக நம்மை அல்லாஹ் ஆக்குவானாக!
குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை:
உங்களில் எவரேனும் குர்பானி கொடுக்க எண்ணினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து அறுத்து முடியும் வரை தன் நகங்களையும், முடிகளையும் களையாது இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உம்முஸலமா (ரழி) நூல்கள் : திர்மிதி நஸயி.
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய நாட்கள்:
அய்யாமுத் தஷ்ரிக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜுபைர் இப்னு முத்இம் (ரழி) நூல்கள் : இப்னு ஹிப்பான்.
அய்யாமுத் தஷ்ரிக் என்பது 11,12,13 ஆகிய நாட்களைக் குறிக்கும். எனவே துல்ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய 4 நாட்கள் குர்பானி கொடுக்கலாம்.
குர்பானி பிராணிகள்:
நபி (ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புகள் உள்ள ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். வாய், கால்கள், கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக அந்த ஆடு இருந்தது. அறிவிப்பவர் : அபூஸயீத் (ரழி) நூல்கள் : திர்மிதி, அபுதாவூத் நஸயீ, இப்னுமாஜா.
1. ஆடு, மாடு, ஓட்டகம் ஆகியவையே குர்பானி பிராணிகள் ஆகும்.
2. மாடு, ஒட்டகம் முதலிய பிராணிகளை 7 நபர்கள் கூட்டாக சேர்ந்து குர்பானி கொடுக்கலாம்.
குர்பானி பிராணிகள் வயது:
ஒட்டகம் 5 வயதும், மாடு 2 வயதும், ஆடு ஒரு வயதும், பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
குர்பானி கொடுக்க கூடாத பிராணிகள்:
1. கொம்பில் பாதி ஒடிந்த பிராணி 2. காது அறுபட்டது 3.தெளிவாக தெரியும் மாறுதல்கள் உள்ளவை 4. தெளிவாக தெரியும் நோய் உள்ளவை 5. பிறவியிலேயே நொண்டியாக உள்ள பிராணி 6. இடைபட்ட காலத்தில் எலும்பு முறிந்துவிட்ட நொண்டி 7. காது இல்லாதவை 8. கொம்பு இல்லாதவை 9. பார்வை இல்லாதவை 10. தானாக எழுந்து நடக்க முடியாத பலவீனமானவை, இவைகளை கண்டிப்பாக குர்பானி கொடுக்கக் கூடாது.
குர்பானி அறுக்கும் நேரம்:
தொழுகைக்கு முன்பு அறுத்தவர் தனக்கே அதை அறுத்துக் கொண்டார். தொழுகை;கு பின்பு அறுத்தவர் தன் குர்பானியை நிறைவேற்றியவர் ஆவார். முஸ்லிம்களின் வழிமுறையை பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுன்தூப் இப்னு ஸுப்யான் (ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
நாமே அறுக்க வேண்டும்:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.
குர்பானி கொடுக்கும்போது ஓதும் துஆ:-
“பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர். இன்னீ வஜ்ஜஹ்(த்)து வஜ்ஹியலில்லதீ. ஃப்தரஸ் ஸமாவா(த்)தி வல் அர்ள ஹனீபன்(வ்)வமா அனமினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தீ வநுஸுகீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன்.”
பொருள்:
“அல்லாஹ்வின் திருநாமத்தால் (அறுக்கிறேன்). அல்லாஹ் மிகப்
பெரியவன். வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்விற்கு சத்தியமற்ற கொள்கைகளை விடுத்தவனாக என்னை உரித்தாக்குகிறேன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் அல்ல. நிச்சயமாக என் தொழுகையும், என் குர்பானியும், எனது வாழ்வும், என் மரணமும், அகிலத்தைப் படைத்துக் காத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்விற்கே உரித்தானதாகும்.
குர்பானி கொடுத்தபின் செய்யும் துஆ -
“யா அல்லாஹ்! உன்னுடைய நேசர் முஹம்மது(ஸல்) அவர்களிடமிருந்தும், உன்னுடைய தோழர் இப்ராஹீம்(அலை) அவர்களிடமிருந்தும் நீ ஏற்றுக்கொண்டதைப்போல்என்னிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக. ஆமீன்.”
ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக குர்பானி இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)
இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.






No comments:
Post a Comment