தங்களின் வருகைக்கு நன்றி

Monday, August 2, 2010

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக....!!



ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக....!!

அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!

ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!

இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ஊண்,உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!

எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...

நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது.அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.
ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.
இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்.

இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.
செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.
இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.

நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.

கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.

No comments:

Post a Comment