தங்களின் வருகைக்கு நன்றி

Sunday, August 22, 2010

ரமலானின் மூன்று பகுதிகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று  ஹதீஸில் காணமுடிகிறது:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து ‘நஜாத்’ மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. இப்னு குஜைமா பாகம் 3 எண் 191

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்.

இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக்  ஹதீஸில் காணமுடிகிறது.

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.


அல்லாஹ் அல் குர்ஆனில்,
நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ).

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் லைலத்து அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது ல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது,என்று கூறுகின்றான். பார்க்க (97 :3).

நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ‘இஃதிகாப்’ இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.


இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!

No comments:

Post a Comment