தங்களின் வருகைக்கு நன்றி

Sunday, December 5, 2010

புது வருட வசந்தம்- முஹர்ரம் மாதச் சிந்தனை

            முஹர்ரம் மாதத்தை வரவேற்கும் முகமாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இது நமது புது வருட ஆரம்பம். வாழ்வின் இரகசியத்தை மீட்டிப்பார்க்கவேண்டிய தருணம். நேரத்தின் வெகுமதியை உணராத மனித சமூகத்திற்கு உணர்வூட்ட வேண்டிய நேரம் இதுவாகும்.

            நாம் ஒரு வருடத்தைக்கடந்து, புது வருடத்திற்கு காலடி எடுத்து வைக்கிறோம். நமது முந்தய செயற்பாடுகளை நாம் மீட்டிப்பார்த்து, முஹாஸபா செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.

            நாம் புதிய வருடத்தை சிறந்த திட்டமிடல்களோடு வரவேற்கவேண்டும். விடுபட்ட நன்மைகளைக்கணக்கிட்டு நிறைவேற்ற முற்படவேண்டும். உலகில் இருவகையான மனிதர்கள் இருப்பார்கள். ஒருவர் : வாழ்வின் யதார்த்தத்தையே புரியாது இருப்பார். அவரிடம் “ஏன் நீ படைக்கப்பட்டாய்?”, “உலகில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்ற கேள்வகளைக்கேட்டால், “என்னை விட்டு விடுங்கள். நான் busy ஆக இருக்கிறேன்” எனக்குறிப்பிட்டு, நம்மை விட்டும் தூரச்செல்வான். அவன் பூமியிலே ஆழப்பதிந்த, எவ்வித பிரயோசனமும் தராத மரத்தைப்போன்று காணப்படுவான்.

        இவர்களைப்போன்றவர்களைப்பற்றியே அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

            “நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவென்றே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன் எனினும், அவற்றைக்கொண்டு நல்லுபதேசங்களை உணர மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப்போல் அல்லது அவற்றை விட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள் தாம் (எம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள்” (அல் அஃராப்: 179).

இரண்டாமவர்:

           வாழ்வின் யதார்த்தத்தை அறிய விரும்புவர். உலக வாழ்வில் தனது பணி என்ன என்பதைத்தேடித்திரிபவர். இவரோ உலக வாழ்வை அழகாகத் தோன்றும் இன்பமாகக்கருதுவார். திருப்தியான உள்ளத்தோடு தனது செயலில் மும்முரமாக ஈடுபடுவார்.

          “ஜின் இனத்தையும், மனித இனத்தையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி, நான் படைக்கவில்லை” (அத்தாரியாத் : 56) என்ற வசனத்தின் யதார்த்தத்தை விளங்கியிருப்பார்.

          பள்ளியில் முதலாவது கல்வியாண்டு ஆரம்பிக்கும் போது,  ஆசிரியர் மாணவர்களது புதிய நகல்களைப் பரீட்சித்துப்பார்ப்பார்; அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அதிலே வழங்குவார்; அவற்றை நிறைவேற்றத் தவறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதே போன்று, இறைவன் 365 பக்கங்களைக்கொண்ட புதியதொரு நகல்களை புதிய ஆண்டாகத்தந்துள்ளான். நமது நகல்கள் தூயதாக இருக்க வேண்டும், கடமைகள் சரியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஏனெனில், ஆசிரியனோ நுணுக்கமான பார்வையுடையவனாக இருக்கிறான்.

          “( மனிதன்) எந்தவொரு வார்த்தையைக்கூறிய போதிலும் அதனை எழுதுவதற்கு ரகீபும், அதீதும்( மலக்குகள்) அங்கிருப்பார்கள்” (காஃப் : 18)

            எனவே, நாம் சென்ற நாட்களைப்பற்றி யோசிக்கும் போது  நாமே சுய விசாரணை செய்து கொள்ள வேண்டும். நன்மை செய்திருப்பின் அல்லாஹ்வைப்புகழ்ந்து கொள்வோம். தீமை செய்திருப்பின் அல்லாஹ்விடம் தௌபா செய்து கொள்வோம். யாருக்கும் அநியாயமிழைத்திருப்பின் அவரிடம் சென்று மன்னிப்புப்பெற்றுக்கொள்வோம்.

          நாம் செய்த நன்மைகளில் குறைபாடுகள் இருப்பின், இன்னும் அதிக நன்மைகளைச்செய்வோம். நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுவதை ஏற்று நடப்போம்:

         “ரமழானின் கடமையான நோன்பிற்கு அடுத்த சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரத்தில் நோற்கும் நோன்பாகும். கடமையான தொழுகைக்கு அடுத்த சிறந்த தொழுகை இரவுத்தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

         “இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஆஷூரா தினம் நோன்பு நோற்பது பற்றி கேட்கப்பட்ட போது: ‘அது கடந்த ஒரு வருடத்தின் பாவங்களை மன்னிக்கும்’ எனக்குறிப்பிட்டார்கள்” (ஆதாரம்: முஸ்லிம்)

         “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா தினம் நோன்பு நோற்று, (மற்றவர்களை) அத்தினத்தில் நோன்பு நோற்குமாறும் கட்டளையிட்டார்கள்” (ஆதாரம்: புஹாரி,முஸ்லிம்)

          இன்றைய தினங்களை நாம் நோக்கும் போது, தீமைகள் செய்யாமலிருக்க உறுதி எடுப்போம். நன்மைகளை அதிகம் செய்ய, இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்க நம் உள்ளங்களைத் தயார்படுத்திக் கொள்வோமாக. குறிப்பாக நாம் ஆஷூரா தினம் நோன்பு நோற்போம். இந்நோன்பை நாம் பின்வருமாறு நோற்க முடியும்:

1.பிறை 9,10 ல் நோற்றல்.

2. பிறை 10,11 ல் நோற்றல்.

3. பிறை 9,10,11 ல் நோற்றல்.

சங்கை மிக்க முஹர்ரம் மாதத்தில் சங்கையாக நடந்து கொள்வோமாக. இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment