தங்களின் வருகைக்கு நன்றி

Monday, December 13, 2010

ஆஷுரா நோன்பின் சிறப்புகள்

             ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம்மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிளந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும்.

             அதற்கு நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்றார்கள். தன் தோழர்களையும் நோற்கும்படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

                      யூதர்களுக்கு மாறுசெய்வதற்காக ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.

1. ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமளான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

           இன்னும் ஒரு அறிவிப்பில்: ஆஷுரா நாள் நோன்பின் சிறப்பை தேடியது போன்று வேறு எந்த நாட்களின் நோன்பின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் தேடியதை நான் பார்க்கவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் நான் கருதுகிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3. ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

No comments:

Post a Comment